எண

எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5448.

     தன்னைவிடத் தலைமைஒரு தகவினும்இங் கியலாத்
          தனித்தலைமைப் பெரும்பதியே தருணதயா நிதியே
     பொன்னடிஎன் சிரத்திருக்கப் புரிந்தபரம் பொருளே
          புத்தமுதம் எனக்களித்த புண்ணியனே நீதான்
     என்னைவிட மாட்டாய்நான் உன்னைவிட மாட்டேன்
          இருவரும்ஒன் றாகிஇங்கே இருக்கின்றோம் இதுதான்
     நின்னருளே அறிந்ததெனில் செயுஞ்செய்கை அனைத்தும்
          நின்செயலோ என்செயலோ நிகழ்த்திடுக நீயே.

உரை:

     தன்னைவிட ஒரு சிறு தலைமைத் தகுதியும் உடையவர் இல்லாத ஒப்பற்ற தலைமைப் பெரும் பதியே! அழகிய தயாநிதியே! உன்னுடைய அழகிய திருவடியை தலையில் இருக்க வைத்தருளிய பரம்பொருளே! புதிய ஞானவமுதத்தை எனக்குத் தந்தருளிய புண்ணிய மூர்த்தியே! நீ என்னை நீங்கவிட மாட்டாய்; நானும் உன்னை விட மாட்டேன்; நாம் இருவரும் ஒன்றாகி இங்கே இருக்கின்றோம்; இதுவும் நின் திருவருள் அறிந்ததாகும்; ஆகவே செய்யும் செய்கைகள் யாவற்றையும் நின் செய்கை என்பதா? என் செய்கை என்பதா? நீயே தெரிவித்தருளுக. எ.று.

     தன்னிடம் ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமில்லாத தனித் தலைவர் என்று சிவபெருமானைப் போற்றுகின்ற வடலூர் அடிகள், “தன்னைவிடத் தலைமை ஒரு தகவினும் இங்கு இயலாம் தனித் தலைமைப் பெரும் பதியே” என்று பரவுகின்றார். தருண தயாநிதி - அழகிய அருட் செல்வன்; சமயத்தில் உதவி அருளுகின்ற தயாநிதி எனினும் பொருந்தும். சீவனும் சிவனுமாகிய நாம் இருவரும் ஒன்றாகி விட்டோமாதலால் செய்யப்படும் செய்கைகள் யாவும் பிரித்தறிய வாரா நிலைமைய என்பாராய், “செய்யும் செய்கை அனைத்தும் நின் செயலோ? என் செயலோ? நிகழ்த்திடுக?” என்று கூறுகின்றார். விடுதல் - நீங்குதல்.

     (153)