5449. கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்
கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்
அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்
அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்
உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளம்எலாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ளபொருள் உள்ளவனாய் நிறைந்தேன்
இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே
இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.
உரை: கடல் கடந்து கரையை அடைந்து நின் திருக்கோயிலைக் கண்டு கொண்டேன்; கோயிலில் நுழைதற்குக் கதவு திறக்கப்பெற்று அதனுட் புகுந்து அதனுள் இருந்த காட்சி எல்லாவற்றையும் கண்டேன்; பின்னர் விலக்குதல் இல்லாத ஞான அமுதுண்டுத் திருவருள் ஞான ஒளியால் அரிய வேண்டுவன அனைத்தையும் அறிந்து தெளிவுற்று அறிவுரு பெற்று அழியா நிலைமையை அடைந்துவிட்டேன்; அதனால் உடல் குளிர்ந்து உயிர் கிளர்ச்சியுற்று உள்ளமெல்லாம் பூரித்தேன்; அதன் பயனாக உள்ளபடி உள்ள பொருள்கள் யாவும் உணர்ந்தவனாய்ப் பூரித்தேன்; துன்பத்தைப் போக்கும் சித்திகள் யாவும் என்னிடத்தே அமைந்து சிறந்தன; இச் செயல்கள் யாவும் அம்பலத்தில் திருக்கூத்தாடுகின்ற சிவபெருமானுடைய அருட் செயல்களாம். எ.று.
இங்கே கடலும் கரையும் பிறவிக் கடலையும் ஞானப் பேற்றையும் குறிக்கின்றன. கோயிற் கதவு என்றது மலத்தால் மறைக்கப்பட்டிருந்து நிலைமையைக் குறிக்கின்றது. அடர் கடந்த திருவமுது - பாச நீக்கத்தால் உளதாகும் ஞானத் தெளிவு. சீவன் முத்தி நிலையில் இருந்து ஞானப் பேற்றால் சிறந்தமை விளங்க, “உடல் குளிர்ந்தேன் உயிர்க்கிளர்ந்தேன் உள்ளமெல்லாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளவனாய் நிறைந்தேன்” எனக் கூறுகின்றார். சித்திகள் எனப்படுவன கன்ம யோக ஞான சித்திகள். இத்திருப்பாட்டும் இப்பகுதியிலுள்ள ஏனைப்பாட்டுக்கள் போல இடம் காலம் காரணம் குறிக்கப்படாமையால் இனிது விளங்காத நிலையில் உளது. (154)
|