5450.

     கற்றாலே புவியாலே ககனமத னாலே
          கனலாலே புனலாலே கதிராதி யாலே
     கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
          கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
     வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
          மெய்அளிக்க வேண்டும்என்றேன் விரைந்தளித்தான் எனக்கே
     ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலநீர்
          எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.

உரை:

     உலகில் வாழும் நன்மக்களே! காற்றாலும் நிலத்தாலும் வானத்தாலும் நெருப்பாலும் தண்ணீராலும் சூரியனாலும் எமனாலும் நோயாலும் கொலைக் கருவிகளாலும் கொலைச் செயல்களாலும் வேறு செய்யப்படும் கொடுஞ் செயல்களாலும் எக்காலத்தும் அழிக்கப்படாமல் விளக்கமுறும் தேகத்தை எனக்கு நல்குதல் வேண்டும் என்று இறைவனை வேண்டினேன்; அவனும் என் வேண்டுகைக்கு இசைந்து எனக்குக் கொடுத்தருளினான்; நான் சொல்வதை ஏற்றுக்கொண்டால் இழிவு உண்டாம் என நீங்கள் நினைக்க வேண்டுவதில்லை; வேறு ஒன்றும் நினைக்காமல் எந்தையாகிய அருட்பெருஞ் சோதி ஆண்டவனை அடைவீர்களாக. எ.று.

     புவி - மண்ணுலகம். ககனம் - வானம். கோள் - வில், வாள் முதலிய கருவிகளின்றிக் கையால் பற்றிச் செய்யும் கொலைகள். நான் சொல்லுவன உலகியலுக்குப் பொருந்தாதன என எண்ணி விலக்கும் கருத்தினராய் உலக நன்மக்கள் இருப்பது காணப்படுதலின், “ஏற்றாலே இழிவு என நினையாதீர்” என்றும், அருட் சோதி ஆண்டவனை எண்ணி அவனை அடைவீரேல் ஏற்பது இகழ்வாம் என்று கருதும் கருத்து ஒழிந்துவிடும் என உணர்மின் என்பாராய், “அருட் பெருஞ் சோதி இறைவனைச் சார்வீரே” என்றும் இயம்புகின்றார்.

     (155)