5451. எல்லா உலகமும் என்வசம் ஆயின
எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின
எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின
எல்லா வித்தையும் என்வித்தை ஆயின
எல்லாப் போகமும் என்போகம் ஆயின
எல்லா இன்பமும் என்இன்பம் ஆயின
எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர்
எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே.
உரை: எல்லாம் வல்லவராய்த் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளும் எனக்குத் தந்தையாகிய சிவபெருமான் எனக்கு எல்லாவற்றையும் தந்து என் உள்ளத்தில் இருக்கின்றாராதலால், எல்லா உலகங்களும் உயிர்களும் முறையே என் வசமாய் என்னுடைய உயிராயின; எல்லா வித்தைகளும் என்னுடையவையாயின; இவ்வாறே எல்லாப் போகங்களும் எல்லா இன்பங்களும் என் போகமும் இன்பமுமாயின. எ.று.
எல்லா உலகங்களும் உயிர்களும் சிவனுடையனவாதலால் அப் பெருமான் என் உள்ளத்திலிருப்பதால் அவை என் வசமாயின என்பாராய், “எல்லா உலகமும் என் வசமாயின எல்லா உயிர்களும் என் உயிராயின” என்று கூறுகின்றார். இம்முறையே ஞானங்களும் வித்தைகளும் பிறவும் சிவனுடையவாதலின் என்னுடையவாயின என்பது கருத்து. (156)
|