5452. சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவன்எனக் கொள்வீர்
எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.
உரை: சன்மார்க்க சங்கத்துச் சான்றோர்களே! சிறியவனாகிய அடியேன் உங்களுடைய திருவடிகளை வணங்கிச் சொல்லுகின்றேன்; இதனைத் தயவு செய்து கேட்பீர்களாக; என்னுடைய நெறியில் நிற்கும் என்னையும் உம்முடைய கூட்டத்துள் ஒருவன் எனக் கொண்டு எல்லாம் செயல் வல்ல நமது இறைவனாகிய சிவனையே தொழுவீர்களாக; புல்லிய நெறிகளில் நிற்கும் பிறரைப் போல் சிவநெறிக்கு வேறாகியவற்றைச் சொல்லி மனமயக்கம் அடைய வேண்டாம்; நிறைந்த மெய்ம்மையான சுகந் தருவதாய் நன்மார்க்கமாய் விளங்குவது சுத்த சிவம் ஒன்றேயாகும்; அதனுடைய ஆணை எனது ஆணையாகும் என்பதை இப்பொழுதே அச்சிவத்தைச் சார்ந்து அறிந்து கொள்வீர்களாக. எ.று.
சன்மார்க்க சங்கமாவது சத்தாகிய சிவ பரம்பொருளை உணர்ந்து அதற்குரிய நெறியில் நின்றொழுகும் யான் உணர்ந்து மேற்கொண்டிருக்கும் நெறியும் சுத்த சிவநெறியாதலால் என்னையும் உம்மில் ஒருவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பாராய், “எனை நுமக்குள் ஒருவன் எனக் கொள்வீர்” என வேண்டுகின்றார். அவர்களும் சிவனையே உணர்ந்து வழிபட்டு ஒழுகுவதால், “நமது இறைவனையே தொழுவீர்” என்று அறிவிக்கின்றார். வேறாகிய நெறியில் உள்ளவர்கள் வேறு சில கொள்கைகளை எடுத்துரைத்து அறிவு மயங்குகின்றமை புலப்பட, “புன்மார்க்கத்தவர் போல வேறு சில புகன்று புந்தி மயக்கு அடையாதீர்” என்று தெளிவிக்கின்றார். (157)
|