எ
எழுசீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
5453. ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
நீதியில் கலந்து நிறைந்தது நானும்
நித்தியன் ஆயினேன் உலகீர்
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
சத்தியச் சுத்தசன் மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
விளம்பினேன் வம்மினோ விரைந்தே.
உரை: முதலும் இடையும் முடிவும் இல்லாத அருட் பெருஞ் சோதியாகிய இறைவன் என் உள்ளத்திற் புகுந்து முறைப்படி கலந்து நிறைந்து கொண்டானாதலால் நானும் என்றுமுள்ள நித்தியனாயினேன்; ஆதலால் உலகத்து நன்மக்களே, இனிச் சாதி மதம் சமயம் என்ற கருத்துக்களை விலக்கிவிட்டுச் சத்தியச் சுத்தமான சன்மார்க்க நெறியில் உங்களை நிறுத்துகின்றேன்; உண்மையையே சொல்லுகின்றேன்; நீவிர் விரைந்து என்பால் வருவீர்களாக. எ.று.
அருட் பெருஞ் சோதி உமது உள்ளத்திற் கலக்குமாயின் நீவிரும் நித்தியராகுதல் நிச்சயம் என்றற்கு, “அருட் பெருஞ் சோதி என் உளத்தே நீதியில் கலந்து நிறைந்தது நானும் நித்தியனாயினேன்” என்று உரைக்கின்றார். சாதி மதம் சமயம் ஆகிய வேற்றுமைக் கூறுகளின்றிச் சமரசமாய் விளங்குவது நித்தியத் தூய சன்மார்க்க நெறியாதலால், நீவிர் என்பால் வந்தால் உங்களையும் சுத்த சன்மார்க்க நித்திய ராக்குவேன் என்பது விளங்க, “சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே சத்தியச் சுத்த சன்மார்க்க வீதியில் உமைத்தான் நிறுவுவல்” என்று கூறுகின்றார். சாதி சமயம் மதம் என்பது முறையாயினும் செய்யுளாதலின் மாறி நின்றது. சமயம் பரந்து பட்டது. மதம் அதன் உட்கூறுகளில் ஒன்று. (158)
|