5454.

     வாது பேசிய மனிதர் காள்ஒரு
          வார்த்தை கேண்மின்கள் வந்துநும்
     போது போவதன் முன்ன ரேஅருட்
          பொதுவி லேநடம் போற்றுவீர்
     தீது பேசினீர் என்றி டாதுமைத்
          திருவு ளங்கொளும் காண்மினோ
     சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன்
          சுற்றம் என்பது பற்றியே.

உரை:

     வாதங்களைச் செய்கின்ற மனிதர்களே! ஒரு வார்த்தை சொல்லுகின்றேன்; கேட்பீர்களாக; உம்முடைய காலம் வீண் போகுமுன் அருளொளி பரவும் அம்பலத்திற்கு வந்து அங்கு நிகழும் இறைவனுடைய அருட் கூத்தைக் கண்டு வணங்கிப் போற்றுவீராக; அதுகண்டு கூத்தப் பெருமானும் நீவிர் இதுவரையும் தீதான சொற்களைப் பேசினீர்கள் என்று வெறுத்தொதுக்காமல் உம்மையும் தனது திருவுளத்தில் ஏன்று கொள்வான்; நான் சூது பேசுகின்றேனில்லை; நீங்களும் என் சுற்றம் என்பது பற்றி உங்கட்கு நல்லதே சொல்லுகின்றேன். எ.று.

     மாறாயவற்றை வற்புறுத்தி பேசுவது பற்றி, “வாது பேசிய மனிதர்காள்” என்று பழிக்கின்றார். தீது பேசுதல் - மாறாகியவற்றை எடுத்து வற்புறுத்துதல். சூது - பொய்யும் புனையுரையுமாம்.

     (159)