5455.

     தூக்கமும் துயரும் அச்சமும் இடரும்
          தொலைந்தன தொலைந்தன எனைவிட்
     டேக்கமும் வினையும் மாயையும் இருளும்
          இரிந்தன ஒழிந்தன முழுதும்
     ஆக்கமும் அருளும் அறிவும்மெய் அன்பும்
          அழிவுறா உடம்பும்மெய் இன்ப
     ஊக்கமும் எனையே உற்றன உலகீர்
          உண்மைஇல் வாசகம் உணர்மின்.

உரை:

     இவ்வுலகத்து நன்மக்களே! தூக்கமும் துன்பமும் அச்சமும் இடர்களும் என்னையும் உம்மையும் விட்டொழிந்தன; என்னை விட்டு ஏக்கம் விளைவிக்கும் கன்மமும் மாயையும் இருள் செய்யும் மலமும் விலகி ஒழிந்தன; என் வாழ்வு முழுதும் செல்வமும் அருளும் அறிவும் மெய்ம்மையான அன்பும் அறியாத உடம்பும் நிலைத்த இன்பப் பேற்றுக்குரிய ஊக்கமும் என்பால் உங்களிடத்தும் வந்து நிறையும்; நான் சொல்லும் இச்சொல் உண்மையாகும் என்று உங்கள் உணர்வில் கொள்வீராக. எ.று.

     தூக்கம் - காரியங்களைத் தாமதமாகச் செய்யும் தன்மை; உறக்கமுமாம். இடர் - துன்பம். ஏக்கம் - செயலாற்றும் திறமின்றி ஏங்குதல். இரிதல் - நீங்குதல். ஆக்கம் - நிலைத்த செல்வம். மெய்யின்ப ஊக்கம் - நிலைத்த சிவபோகத்தைப் பெற வேண்டும் என்று உள்ளத்தில் எழுகின்ற கிளர்ச்சி.

     (160)