5458.

     பொருணற் கொடியே மாற்றுயர்ந்த
          பொன்னங் கொடியே போதாந்த
     வருணக் கொடியே எல்லாஞ்செய்
          வல்லார் இடஞ்சேர் மணிக்கொடியே
     தருணக் கொடியே என்தன்னைத்
          தாங்கி ஓங்குந் தனிக்கொடியே
     கருணைக் கொடியே ஞானசிவ
          காமக் கொடியே அருளுகவே.

உரை:

     மெய்ப்பொருளே உருவாகிய நற்கொடியும், மாற்றால் உயர்ந்த பொற்கொடியும், ஞானத்தின் முடிவில் விளங்குகின்ற வண்ணக் கொடியும், எல்லாம் செயல் வல்லவராகிய சிவன் திருமேனியில் இடப்பாகத்தில் பொருந்திய நீலமணியின் நிறத்தை உடையவளும், இளங்கொடி போல்பவளும், என்னைத் தாங்கி உயர்விக்கும் ஒப்பற்ற கொடியும், கருணைக் கொடியுமாகிய ஞான சிவகாமக் கொடியே எனக்கு அருள் செய்வாயாக. எ.று.

     எல்லாப் பொருளினும் உயர்ந்ததாகலின் மெய்ம்மைப் பொருளாம் என்பது விளங்க, “பொருள் நற்கொடியே” என்று போற்றுகின்றார். மாற்று காண முடியாதபடி உயர்ந்த பொன்னாதலின், “மாற்றுயர்ந்த பொன்” எனப் புகல்கின்றார். போதாந்தக் கொடி - வருணக் கொடி என இயையும். போதாந்தம் - ஞானத்தின் எல்லை. வருணம் - உயர்வு. மணி என்றது இங்கே நீலமணியை. தருணக் கொடி - இளங்கொடி. அருளே அவட்கு உருவாதலின், “கருணைக் கொடி” என்றும், சிவஞானத்தை நல்கும் தேவியாதல் பற்றி, “ஞான சிவகாமக் கொடி” என்றும் ஏத்துகின்றார்.

     (2)