5459.

     நீட்டுக் கொடியே சன்மார்க்க
          நீதிக் கொடியே சிவகீதப்
     பாட்டுக் கொடியே இறைவர்வலப்
          பாகக் கொடியே பரநாத
     நாட்டுக் கொடியே எனைஈன்ற
          ஞானக் கொடியே என்னுறவாம்
     கூட்டுக் கொடியே சிவகாமக்
          கொடியே அடியேற் கருளுகவே.

உரை:

     நெடிதுயர்ந்த கொடியும், சன்மார்க்க நீதிக் கொடியும், சிவனைப் பாடும் பாட்டுக்குப் பொருளாகிய கொடியும், சிவனுடைய வலப் பாகத்தில் விளங்கும் கொடிபோல் விளங்குபவளும் பரநாத நாட்டில் உறையும் கொடியும், என்னைப் பெற்ற ஞானக் கொடியும், எனக்கு உறவாய் நலம் கூட்டி வைக்கும் கொடியுமாகிய சிவகாமக் கொடியே! அடியேனுக்கு அருள் செய்வாயாக. எ.று.

     புகழால் நெடிதுயர்ந்த கொடி போல்பவளாதலின் சிவசத்தியை, “நீட்டுக் கொடியே” என்று புகழ்கின்றார். சிவபெருமானைப் பாடும் இனிய பாட்டுக்களுக்குப் பொருளாய் நிறைபவளாதலால், “சிவகீதப் பாட்டுக் கொடியே” என்று பரவுகின்றார். சுத்த தத்துவத்தின் மத்தகத்தில் விளங்கும் நாத தத்துவத்தின் மேலதாகிய பரநாத தத்துவ புவனத்தில் எழுந்தருளும் சிவகாமியாதலின், “பரநாத நாட்டுக் கொடியே” என்று குறிக்கின்றார். உயிர்கட்கு உறவாய் நின்று நலம் பலவும் எய்த உதவுவதால், “என் உறவாம் கூட்டுக் கொடியே” என்று துதிக்கின்றார்.

     (3)