5460.

     மாலக் கொடியேன் குற்றம்எலாம்
          மன்னித் தருளி மரணம்எனும்
     சாலக் கொடியை ஒடித்தெனக்குட்
          சார்ந்து விளங்கும் தவக்கொடியே
     காலக் கருவைக் கடந்தொளிர்வான்
          கருவும் கடந்து வயங்குகின்ற
     கோலக் கொடியே சிவஞானக்
          கொடியே அடியேற் கருளுகவே.

உரை:

     மயக்கம் நிறைந்த கொடியவனாகிய என்னுடைய குற்றமெல்லாம் பொறுத்தருளி மரணம் எனப்படும் சாலம் புரியும் கொடியை ஒடித்தெறிந்து எனக்குள்ளே எழுந்தருளி விளங்கும் தவக்கொடியும், கால தத்துவத்தைக் கடந்து விளங்கும் சிதாகாசமாகிய வான நிலையையும் கடந்து விளங்குகின்ற அழகிய கொடியுமாகிய சிவஞானக் கொடியே! அடியவனாகிய எனக்கு அருளுவாயாக. எ.று.

     மால் - மயக்கம். மயக்க மிகுதியால் கொடுமையே புரிபவன் எனத் தம்மைக் குறித்தற்கு, “மாலக் கொடியேன்” என்று கூறுகின்றார். சாலம் - பொய்த் தோற்றம். மரணமும் அது போல்வது என்று விளக்குவதற்கு, “மரணமெனும் சாலக் கொடி” என்று சாற்றுகின்றார். இளமையிலேயே, இமயச் சாரலில் தவம் புரிந்தவளாதலின் சிவசத்தியை, “தவக் கொடியே” என்று புகழ்கின்றார். காலக் கரு - வான் கரு என்றவிடத்துக் கரு என்பது தத்துவ மூலத்தைக் குறிக்கின்றது. கோலம் - அழகு. தவக் கொடியும் கோலக் கொடியுமாகிய சிவஞானக் கொடி என்று சிற்சத்தியைச் சிறப்பிக்கின்றார்.

     (4)