5461.

     நாடாக் கொடிய மனம்அடக்கி
          நல்ல மனத்தைக் கனிவித்துப்
     பாடாப் பிழையைப் பொறுத்தெனக்கும்
          பதம்ஈந் தாண்ட பதிக்கொடியே
     தேடாக் கரும சித்திஎலாம்
          திகழத் தயவால் தெரிவித்த
     கோடாக் கொடியே சிவதருமக்
          கொடியே அடியேற் கருளுகவே.

உரை:

     நல்லவற்றின் மேல் படராத கொடுமையுடைய மனத்தின் சேட்டையை அடக்கி நல்ல மனத்தை இளகுவித்துப் பாடாதிருந்த குற்றத்தைப் பொறுத்தருளி எனக்கும் சிவபதத்தைத் தந்து என்னை ஆண்டுகொண்ட பதிக் கொடியும், தேடற்காகாத கரும சித்திகள் எல்லாம் என்பால் விளங்க அருளால் தெரிவித்த கோடாக் கொடியும், சிவதருமக் கொடியுமாகிய அன்னையே! அடியேனுக்கு அருள் புரிவாயாக. எ.று.

     நன்னெறியில் செல்லாமை விளங்க, “நாடாக் கொடிய மனம்” என்று நவில்கின்றார். பதிக்கொடி என்பது சிவபதியோடு பிரிவின்றிக் கூடி இருக்கும் சிற்சத்தியாகிய உமாதேவியைப் “பதிக் கொடியே” என்று பாராட்டுகின்றார். கரும சித்திகளாவன அணிமா மகிமா முதல் தேகத்தைக் கல்ப சித்தி செய்து கொள்ளுதல் வரையுள்ள சித்தி வகைகள் பலவும் அடங்க, “கரும சித்தி எலாம்” என்று குறிக்கின்றார். அணிமா முதலியன செய்யப்படுவனவே அன்றித் தேடிப் பெறப்படுவன அல்ல என விளக்குதற்கு, “தேடாக் கரும சித்தி” என்று தெரிவிக்கின்றார். கோணுதலின்றி நேர்மை பிறழாமல் விளங்குவது தோன்றச் சிற்சத்தியை, “கோடாக் கொடி” என்று கூறுகின்றார். சிவதருமத்தின் உருவமாதலின் சிவகாமியை, “சிவதருமக் கொடி” என்று போற்றுகின்றார்.

     (5)