5462. மணங்கொள் கொடிப்பூ முதல்நான்கு
வகைப்பூ வடிவுள் வயங்குகின்ற
வணங்கொள் கொடியே ஐம்பூவும்
மலிய மலர்ந்த வான்கொடியே
கணங்கொள் யோக சித்திஎலாம்
காட்டுங் கொடியே கலங்காத
குணங்கொள் கொடியே சிவபோகக்
கொடியே அடியேற் கருளுகவே.
உரை: நறுமணம் கமழுகின்ற கொடிப் பூ முதல் நால்வகைப் பூக்களின் வடிவத்துள் விளங்குகின்ற அழகு பொருந்திய கொடி போல்பவளும், ஐவகைப் பூக்களும் நிறைய மலர்ந்த தெய்வக் கொடி போல்பவளும், திரண்ட யோக சித்திகள் பலவற்றையும் காட்டி அருளுகின்ற யோகக் கொடியும், மாறாத குணங்கள் நிறைந்த சிவபோகக் கொடியுமாகிய சிவகாமி தேவியே! அடியேனுக்கு அருள் புரிக. எ.று.
இயல்பாகவே மணமுடையனவாய் விளங்குகின்ற கோட்டுப் பூ, கொடிப் பூ, நிலப் பூ, நீர்ப் பூ என்ற நால்வகைப் பூக்களையும், “கொடிப் பூ முதல் நான்கு வகைப் பூ“ என்று குறிக்கின்றார். அழகை யுணர்த்தும் வண்ணம் என்பது வணம் என வந்தது. முன் சொன்ன பூக்கள் நான்கினோடு ஆகாயப் பூவும் சேர்ந்து ஐம்பூவும் மலர நிற்பது தேவர் உலகத்து வான் கொடி என்பது புலப்பட, “ஐம்பூவும் மலிய மலர்ந்த வான் கொடி” என உரைக்கின்றார். கணம் - திரட்சி. அறுபத்துநான்கு சித்திகளையும் தன் சுதந்திரத்தில் நடத்துவது யோக சித்தியாம். சிவானந்தத்தைத் தரும் சிற்சத்தியை, “சிவபோகக் கொடி” என்று கூறுகின்றார். (6)
|