5463.

     புலங்கொள் கொடிய மனம்போன
          போக்கில் போகா தெனைமீட்டு
     நலங்கொள் கருணைச் சன்மார்க்க
          நாட்டில் விடுத்த நற்கொடியே
     வலங்கொள் ஞான சித்திஎலாம்
          வயங்க விளங்கும் மணிமன்றில்
     குலங்கொள் கொடியே மெய்ஞ்ஞானக்
          கொடியே அடியேற் கருளுகவே.

உரை:

     புலன்களின் வழியாக ஓடுகின்ற கொடுமை யுடையதாகிய மனம் சென்ற போக்கில் போகவிடாது என்னை அவற்றினின்றும் மீளச் செய்து நலம் பயக்கும் அருள் நெறியாகிய சன்மார்க்க நெறியில் என்னைச் செல்வித்த நற்கொடியும், வெற்றி தருகின்ற ஞான சித்திகள் எல்லாம் சிறப்புற விளங்கும் அழகிய அம்பலத்தில் உயர்ந்து தோன்றும் உயர்கொடியும், மெய்ஞ்ஞானக் கொடியுமாகிய சிவ சிற்சத்தியாகிய தேவியே! எனக்கு அருள் புரிவாயாக. எ.று.

     ஐம்புலன்கள் மேலும் எழுதிச் செல்லும் இயல்பினதாகலின், “புலன்கொள் கொடிய மனம்” என்று கூறுகின்றார். இன்பமே நல்கும் பெருநெறியாதலால், “நலங் கொள் கருணைச் சன்மார்க்க நாடு” என்று எடுத்துக் கூறுகின்றார். நாடு என்பது ஈண்டு நெறி குறித்து நின்றது. ஞான சித்தியாவது அறுபத்து நான்காயிரம் சத்திகளையும் தன் சுதந்திரத்தில் நடத்துவதாம் என்று உபதேசப்பகுதி கூறுகிறது. குலம் என்றது இங்கே உயர்வு குறித்து நின்றது. சிற்சத்தி ஞான சித்தி எனவும் வழங்குவது பற்றி, “மெய்ஞ் ஞானக் கொடியே” என்று விளம்புகின்றார்.

     (7)