5464. வெறிக்கும் சமயக் குழியில்விழ
விரைந்தேன் தன்னை விழாதவகை
மறிக்கும் ஒருபே ரறிவளித்த
வள்ளற் கொடியே மனக்கொடியைச்
செறிக்கும் பெரியர் உளத்தோங்கும்
தெய்வக் கொடியே சிவஞானம்
குறிக்கும் கொடியே ஆனந்தக்
கொடியே அடியேற் கருளுகவே.
உரை: வெறுக்கப்படுகின்ற சமயம் என்னும் குழியில் விழுதற்கு விரைந்து கொண்டிருந்த என்னை அதனுள் விழாதபடித் தடுக்கவல்ல ஒரு பெரிய சமரச அறிவளித்த வளவிய கொடியும், மனமாகிய கொடுமை உடையதொன்றை அடக்கி ஒடுக்கும் சான்றோர்களுடைய உள்ளத்தில் ஓங்கி உயர்கின்ற தெய்வக் கொடியும், சிவஞானத்தைக் குறிக்கொண்டு நோக்குவிக்கும் கொடியும், ஆனந்தக் கொடியுமாகிய பெருமாட்டியே! அடியேனுக்கு அருள் புரிவாயாக. எ.று.
சமய வெறியை உண்டுபண்ணுவது பற்றி, “வெறிக்கும் சமயக் கொடி” என்று வெறுத்துரைக்கின்றார். சமய வெறியாவது தாம் கொண்ட சமயமே மெய்ம்மைச் சமயம் பிறவெல்லாம் பொய்யானவை என்று வெறுத்துப் பேசிக் கலகம் விளைவிக்கும் மனநிலை. அது சமரச ஞானத்தாலன்றி ஒருபோதும் நீங்காதாகலின் சமரச ஞானத்தை, “ஒரு பேரறிவு” என்று உரைக்கின்றார். வள்ளற் கொடி - வளமான கொடி. செறித்தல் - அடங்குதல். சமரச ஞானமே உண்மைச் சிவஞானமென்றும் அஃது ஒன்றினாலே ஆனந்தம் பெறப்படும் என்றும் கூறுவாராய், “சிவஞானம் குறிக்கும் கொடியே ஆனந்தக் கொடியே” என்று புகழ்ந்துரைக்கின்றார். (8)
|