5465. கடுத்த விடர்வன் பயம்கவலை
எல்லாம் தவிர்த்துக் கருத்துள்ளே
அடுத்த கொடியே அருளமுதம்
அளித்தென் தனைமெய் அருட்கரத்தால்
எடுத்த கொடியே சித்திஎலாம்
இந்தா மகனே என்றெனக்கே
கொடுத்த கொடியே ஆனந்தக்
கொடியே அடியேற் கருளுகவே.
உரை: மிக்க இடர்களும் வலிய பயங்களும் கவலைகளும் ஆகிய எல்லாவற்றையும் போக்கி என் மனத்தின்கண் எழுந்தருளும் இன்பக் கொடியும், திருவருளாகிய அமுதத்தை எனக்குத் தந்து மெய்ம்மையான திருவருளாகிய என்னை உயர்த்தி அருளிய கொடியும், சித்திகள் பலவற்றையும் இதோ வாங்கிக்கொள் என்று சொல்லி எனக்குக் கொடுத்தருளிய கொடி போல்பவளுமாகிய ஆனந்தக் கொடியே; எனக்கு அருள் புரிவாயாக. எ.று.
கடுத்த இடர் - மேன்மேலும் வந்து தாக்கிய துன்பங்கள். வன்பயம் - விலக்குதற்கரிய மிகுந்த அச்சம். தேவியின் திருவருள் உள்ளத்தில் பதிந்ததினால் மேலே கூறிய இடர் பயம் முதலியன எல்லாம் போயினமை பற்றி, “கருத்துள்ளே அடுத்த கொடியே” என்று கூறுகின்றார். தேவியின் திருவருளமுதம் மெய்ம்மையான கை போல் எடுத்து ஆதரிப்பதால், “மெய்யருள் கரத்தால் எடுத்த கொடியே” என்று விளம்புகின்றார். இந்தா என்பது இதோ தருகின்றேன் இதனை வாங்கிக்கொள் எனக் கூறும் உலகியல் வழக்கு. (9)
|