127. இன்பத் திறன்

    அஃதாவது திருவருள் ஞானத்தால் பெறப்படும் இன்பக் கூறுபாட்டினை உலகவர்க்கு எடுத்துரைப்பது.

5467.

     உலகுபுகழ் திருவமுதம் திருச்சிற்றம் பலத்தே
          உடையவர்இன் றுதவினர்நான் உண்டுகுறை தீர்ந்தேன்
     இலகுசிவ போகவடி வாகிமகிழ் கின்றேன்
          இளைப்பறியேன் தவிப்பறியேன் இடர்செய்பசி அறியேன்
     விலகல்இலாத் திருவனையீர் நீவிர்எலாம் பொசித்தே
          விரைந்துவம்மின் அம்பலத்தே விளங்குதிருக் கூத்தின்
     அலகறியாத் திறம்பாடி ஆடுதும்நாம் இதுவே
          அருள்அடையும் நெறிஎனவே தாகமம்ஆர்ப் பனவே.

உரை:

     உலகத்தில் சான்றோர் பலரும் புகழ்ந்துரைக்கும் திருவருள் ஞானமாகிய அமுதத்தைத் திருச்சிற்றம்பலத்தில் உள்ள பெருமானாகிய சிவன் இப்பொழுது எனக்கு அருளினாராக, யானும் அதனை உண்டு என்னுடைய குறைகளைத் தீர்த்துக் கொண்டேன்; அன்றியும் யான் சிவபோகத்தை நுகரும் வடிவுடையவனாய் இன்புற்று இளைப்பின்றி வருத்தமின்றித் துன்பம் தரும் பசி நோயுமின்றி இருக்கின்றேன்; விலக்க முடியாத திருவருள் செல்வத்தை உடையவர்களே, நீங்கள் எல்லோரும் அதனை உண்டு என்பால் விரைந்து வருவீர்களாக; திருவம்பலத்தின்கண் விளங்குகின்ற திருவருள் கூத்தின் அளக்க முடியாத அருட் சிறப்பைப் பாடி ஆடி மகிழ்வோம்; இதுவே திருவருள் ஞானத்தை அடையும் நெறியாகும் என வேதங்களும் ஆகமங்களும் எடுத்துரைக்கின்றன. எ.று.

     திருவருள் ஞானத்தை, “உலகு புகழ் திருவமுதம்” என்றும் அதனை உணர்ந்து கொண்டேன் என்பதற்கு, “உண்டு குறை தீர்ந்தேன்” என்றும் உரைக்கின்றார். இலகு சிவபோகம் என்றது சிவதரிசன சிவயோகங்களால் பெறலாகும் சிவபோகம். பசியை நோய் என்பவாகலின், “இடர் செய் பசி” என்று குறிக்கின்றார். நிலைத்த சிவானந்தத்தை நல்கும் திருவருட் செல்வர்களை, “விலகல் இலாத் திருவனையீர்” என்றும், அவர்களைத் திருவருள் ஞானிகளாய் வருக என்றற்கு, “நீவிர் எலாம் அதனைப் பொசித்து விரைந்து வம்மின்” என்றும் வேண்டுகின்றார். வம்மின் - வருக. அளவிட முடியாத கூறுபாடுகளை, “அலகறியாத் திறம்” என்றும், அதனையே அருள் ஞானத்தைப் பெறும் நெறி என வேதாகமங்கள் எடுத்தோதுகின்றன என்பாராய், “இதுவே அருள் அடையும் நெறி என வேதாகமம் ஆர்ப்பனவே” என்றும் உரைக்கின்றார்.

     (1)