5469.

     அளந்திடுவே தாகமத்தின் அடியும்நடு முடியும்
          அப்புறமும் அப்பாலும் அதன்மேலும் விளங்கி
     வளர்ந்திடுசிற் றம்பலத்தே வயங்கியபே ரொளியே
          மாற்றறியாப் பொன்னேஎன் மன்னேகண் மணியே
     தளர்ந்தஎனை அக்கணத்தே தளர்வொழித்தா னந்தம்
          தந்தபெருந் தகையேஎன் தனித்தனித் துணைவா
     உளந்தருசம் மதமான பணிஇட்டாய் எனக்கே
          உன்பணியே பணியல்லால் என்பணிவே றிலையே.

உரை:

     பிரமாணத்தால் கொள்ளப்படுகின்ற வேதாகமங்களின் முதலும் இடையும் கடையும் அப்புறத்தும் அதற்கு அப்பாலும் விளக்கமுற்று வளர்ந்தோங்கும் அம்பலத்தின்கண் விளங்குகின்ற பெரிய ஒளிப் பொருளே! மாற்றில்லாத பொன்னாகியவனே! என்னுடைய மன்னவனே! என் கண்ணின் மணி போன்றவனே! தளர்ச்சியுற்று வருந்தும் அந்த நேரத்திலே தளர்ச்சியைப் போக்கிச் சிவானந்தத்தைத் தந்த பெருந்தகையே! என்னுடைய ஒப்பற்ற தனித் துணைவனே! என் மனத்துக்குப் பொருத்தமான திருப்பணியையே எனக்கு இட்டருளினாய்; எனக்கு உன் பணி செய்வது தவிர வேறாகப் பணி ஒன்றுமில்லை. எ.று.

     வேதங்களையும் ஆகமங்களையும் பிரமாண நூல்களாகப் பெரியோர் கொள்ளுவதால், “அளந்திடு வேதாகமம்” என்று கூறுகின்றார். வைதீக ஞானத்துக்கும் ஆகம ஞானத்துக்கும் அதீதமாக விளங்குவது சிற்றம்பலமாதலால், “அடியும் நடு முடியும் அப்புறமும் அப்பால் அதன் மேலும் விளங்கி வளர்ந்திடு சிற்றம்பலம்” என்று புகல்கின்றார். பேரொளி - ஞான ஒளி. மன்னவனை - மன்னே என்று பாராட்டுகின்றார். தளர்ச்சி போக்கி ஆனந்தம் தருவது பற்றி, “ஆனந்தம் தந்த பெருந்தகையே” என்று புகழ்கின்றார். உளந்தரு சம்மதமான பணி - மனதுக்கு இசைந்த பூமாலை சொன் மாலைகளைத் தொடுத்தணிதல்.

     (3)