5470. நாடுகலந் தாள்கின்றோர் எல்லாரும் வியப்ப
நண்ணிஎனை மாலைஇட்ட நாயகனே நாட்டில்
ஈடுகரைந் திடற்கரிதாம் திருச்சிற்றம் பலத்தே
இன்பநடம் புரிகின்ற இறைவனே எனைநீ
பாடுகஎன் னோடுகலந் தாடுகஎன் றெனக்கே
பணிஇட்டாய் நான்செய்பெரும் பாக்கியம்என் றுவந்தேன்
கோடுதவ றாதுனைநான் பாடுதற்கிங் கேற்ற
குணப்பொருளும் இலக்கியமும் கொடுத்துமகிழ்ந் தருளே.
உரை: நாட்டை அன்பு கலந்து ஆள்கின்றவர்கள் எல்லாரும் கண்டு வியக்கும்படி என்பால் வந்து என்னைத் தொண்டனென்று மாலையணிந்த தலைவனே! நாட்டில் ஒப்பு கூறுதற்கில்லாத திருச்சிற்றம்பலத்தின்கண் இனிய திருக்கூத்தாடுகின்ற இறைவனே! என்னைப் பாடுக என்றும் அன்பு கலந்து ஆடுக என்றும் எனக்குக் கட்டளை இட்டுள்ளாய்; இதனை நான் முன் செய்த நற்றவப் பயன் என்று மகிழ்கின்றேன்; ஆனால் நீ இட்ட கட்டளை தவறாமல் நான் பாடுதற்கு ஏற்புடைய உன்னுடைய குணங்களாகிய பொருளையும் செயல்களாகிய இலக்கியங்களையும் எனக்குத் தந்தருளுக. எ.று.
நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களை “நாடு கலந்தாள்கின்றோர்” என்று கூறுகின்றார். தன்னைத் தொண்டனாக ஏற்று மாலையும் அணிந்து மகிழ்வித்தமை புலப்பட, “நண்ணி எனை மாலையிட்ட நாயகனே” என்று நவில்கின்றார். ஈடு கரைதல் - ஒப்பு கூறுதல். பணி - கட்டளை. ஆணைப்படித் தவறாது நடத்தலைக் “கோடு தவறாமை” என்று கூறுவது உலகியல் மரபு. இறைவனுடைய எண்ணிறந்த குணங்களை உரைப்பது குணமாகிய பொருள். இறைவனுடைய எல்லையில்லாத அருட் செயல்கள் இலக்கியமாம் என அறிக. நீ கட்டளை இட்டபடிப் பாடுவேன்; பாடுதற்குரிய குணநலன்களையும் அருட் செயல்களையும் பொருளாகத் தந்தருளுக என்பது கருத்து. (4)
|