5471. நண்புடையாய் என்னுடைய நாயகனே எனது
நல்உறவே சிற்சபையில் நடம்புரியும் தலைவா
எண்புடையா மறைமுடிக்கும் எட்டாநின் புகழை
யாதறிவேன் பாடுகஎன் றெனக்கேவல் இட்டாய்
பண்புடைநின் மெய்யன்பர் பாடியபே ரன்பில்
பழுத்தபழம் பாட்டில்ஒரு பாட்டும்அறி யேனே
தண்புடைநன் மொழித்திரளும் சுவைப்பொருளும் அவைக்கே
தக்கஇயல் இலக்கியமும் தந்தருள்வாய் எனக்கே.
உரை: நட்புடையவனும் எனக்குத் தலைவனும் என்னுடைய நல்ல உறவும் ஞான சபையில் நடம் புரிந்தருளும் தலைவனுமாகிய சிவனே! எண்வகைக் குணங்களையுடைய வேதங்களின் முடிவுக்கும் எட்டாத நின் திருப்புகழை யாதுமறியேன் ஆயினும் என்னைப் பாடுக என்று எனக்குக் கட்டளையிட்டுவிட்டாய்; ஆயினும் உயர்ந்த பண்புகளையுடைய உன்னுடைய மெய்ம்மை சான்ற தொண்டர்களின் பேரன்பினால் பாடிய பழம்பாட்டுக்களில் ஒரு பாட்டும் யானறியேன்; ஆதலால் குளிர்ந்த இனிய சொற்களும் அவற்றிற்கேற்ப சுவையான பொருளும் அவற்றிற்கொத்த இயல்பமைந்த இலக்கியங்களையும் எனக்குத் தந்தருளுவாயாக. எ.று.
நட்பு - மெய்யன்பு. எல்லா உயிர்களையும் நேசிப்பவனாதலால் சிவனை, “நண்புடையாய்” என்று நவில்கின்றார். இறைவனுடைய எண்குணங்களையும் எடுத்துரைப்பது மறைகளின் முடிபாதலின், அவற்றிற்கும் எட்டாத மாண்புடையது இறைவன் திருப்புகழ் என்றற்கு, “எண்புடையா மறை முடிக்கும் எட்டா நின் புகழ்” என்று உரைக்கின்றார். திருஞானசம்பந்தர் முதலிய பேரன்பர்கள் அன்பால் பாடியவையாதலால் அவற்றை, “நின் மெய்யன்பர் பாடிய பேரன்பில் பழுத்த பழம்பாட்டு” என்று பாராட்டுகின்றார். நான் பாடும் பாட்டுக்கள் யாவும் சொல்லாலும் பொருளாலும் சுவை மிக்கனவாய் இருத்தல் வேண்டும் என்றற்கு, “மொழித் திரளும் சுவைப் பொருளும்” என்றும், அவை பாடுதற்கமைந்த இயல்வகையும் இலக்கிய நெறியும் தந்தருளுக என்று கேட்பாராய், “அவைக்கே தக்க இயல் இலக்கியமும் தந்தருள்வாய் எனக்கே” என்றும் கூறுகின்றார். அவற்றிற்கும் எனற்பாலது அவைக்கே என வந்தது. மெய்யன்பர் பாடிய பழம்பாட்டில் ஒரு பாட்டும் நான் அறியேனாதலால் அவற்றிற்குத் தக்க சொல்லும் பொருளும் இயலும் இலக்கியமும் எனக்குத் தந்தருளுக என இதனால் வேண்டிக் கொள்கின்றார். இயல் என்றவிடத்து எண்ணும்மை தொக்கது. (5)
|