5472.

     பணிந்தடங்கும் மனத்தவர்பால் பரிந்தமரும் பதியே
          பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே
     கணிந்தமறை பலகோடி ஆகமம்பல் கோடி
          கடவுள்நின தருட்புகழைக் கணிப்பதற்குப் பலகால்
     துணிந்துதுணிந் தெழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந் தடிகள்
          சுமந்துசுமந் திளைத்திளைத்துச் சொல்லியவல் லனவென்
     றணிந்தமொழி மாற்றிவலி தணிந்தஎன்றால் அந்தோ
          அடியேன்நின் புகழ்உரைக்கல் ஆவதுவோ அறிந்தே.

உரை:

     பணிவுடன் அடங்கி ஒழுகும் மனம் படைத்த பெரியவர்கள் உள்ளத்தில் விரும்பி எழுந்தருளும் பதிப் பொருளும் பாடுகின்ற அடியார்களின் உள்ளத்தில் வந்து பொருந்துகின்ற ஞானகுருவும் ஆகிய சிவனே! குறிக்கப்படுகின்ற பல கோடி வேதங்களும் பல கோடி ஆகமங்களும் கடவுளாகிய உன்னுடைய அருட் புகழை எண்ணித் துணிதற்குப் பலகாலும் துணிவுடன் எழுந்தும் தொடர்ந்தும் உம்முடைய திருவடிகளை முடிமேல் கொண்டும் அன்பில் திளைத்தும் நாங்கள் சொல்லியவற்றோடு அமைவன அல்ல என்று அழகிய மொழிகளால் சொல்லி வலியற்று அடங்கினை என்றால் அடியவனாகிய நான் உன்னுடைய திருப்புகழை உரைத்தல் முடியுமோ? எ.று.

     பணிவும் அடக்கமும் உடைய மெய்யன்பர்களை, “பணிந்தடங்கும் மனத்தவர்” என்று குறிக்கின்றார். கணித்த என்பது கணிந்த என வந்தது. கணித்தல் - அளவிடுதல். மொழி மாற்றல் - சொல்லும் திறமின்றி அடங்குதல். வேதங்களும் ஆகமங்களும் இறைவன் அருட் புகழை அளவிட்டு உரைப்பதற்கு மாட்டாமல் சொல்வலி இழந்து ஒடுங்கின என்றால் அடியவனாகிய நான் உன்னுடைய திருப்புகழை எடுத்துரைப்பது என்பது எளிதன்று என உரைத்தவாறாம்.

     (6)