5473. விதிப்பவர்கள் பலகோடி திதிப்பவர்பல் கோடி
மேலவர்கள் ஒருகோடிவிரைந்து விரைந் துனையே
மதிப்பவர்கள் ஆகிஅவர் மதியாலே பலகால்
மதித்துமதித் தவர்மதிபெண் மதியாகி அலந்தே
துதிப்பதுவே நலம்எனக்கொண் டிற்றைவரை ஏற்ற
சொற்பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால்
குதிப்பொழியா மனச்சிறிய குரங்கொடுழல் கின்றேன்
குறித்துரைப்பேன் என்னஉளம் கூசுகின்ற தரசே.
உரை: நல்லறங்களைச் செய்பவர்களும் நன்னெறிகளைப் படைப்பவர்களும் இவர்கட்கும் மேலாகியவர்களும் பல கோடிக்கணக்கில் இருக்கின்றார்கள்; எனினும் அவர்கள் உன்னையே பரம்பொருள் என எண்ணுபவர்களாய் அவர்களுடைய நன்ஞானத்தால் பலகாலும் பலபல எண்ணி மதியிழந்து பெண்ணறிவு உடையவராய் வருந்தி இனி இப்பெருமானைத் துதிப்பதே நலம் எனக் கருதி இன்றுவரை அதற்கேற்ற சொல்லும் பொருளும் காணாமல் அறிவு மயங்குகின்றார்கள் என்றால் துள்ளித் திரியும் மனமாகிய சிறிய குரங்கோடு கூடி மெலிகின்ற நான் ஒருவாறு சிவபெருமானைக் குறித்துப் பாடுதற்கு என் உள்ளம் நாணத்தால் கூசுகின்றது. எ.று.
விதிப்பவர்கள் திதிப்பவர்கள் என்பதற்குப் படைக்கும் கடவுளரும் காக்கும் கடவுளரும் மிகப்பலர் எனினும் பொருந்தும். அவர்களில் மேலவர்கள் என்பது அழித்தற் தொழிலைச் செய்கின்ற உருத்திரர்கள் எனினும் பொருந்தும். பெண் மதி என்பது பெண்ணறிவு. அஃதாவது குறைவுடைய அறிவு. அலத்தல் - வருந்தி மெலிதல். இதனால் பிரமன் திருமால் முதலிய தேவர்களும் நல்லறங்களையும் நன்னெறிகளையும் படைத்தருளும் முனிபுங்கவரும் அறிவு சுருங்கிப் பெண்ணறிவுடையவராய்த் துதிப்பதே நலம் எனத் துணிந்து வருந்துகின்றார் என்றால் துள்ளுகின்ற மனத்தை உடைய சிறியவனாகிய நான் உன் புகழைப் பாடி மகிழ்வேன் என நினைப்பது நாணத் தக்கதாம். (7)
|