5475. வாக்கொழிந்து மனம்ஒழிந்து மதிஒழிந்து மதியின்
வாதனையும் ஒழிந்தறிவாய் வயங்கிநின்ற இடத்தும்
போக்கொழிந்தும் வரவொழிந்தும் பூரணமாய் அதுவும்
போனபொழு துள்ளபடி புகலுவதெப் படியோ
நீக்கொழிந்த நிறைவேமெய்ந் நிலையேஎன் னுடைய
நேயமே ஆனந்த நிருத்தமிடும் பதியே
ஏக்கொழிந்தார் உளத்திருக்கும் இறையேஎன் குருவே
எல்லாமாய் அல்லதுமாய் இலங்கியமெய்ப் பொருளே.
உரை: எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற மெய்ம்மை நிலையும், என்னுடைய ஞானத்தால் உணரப்படும் நேயப் பொருளும், ஆனந்தத் திருக்கூத்தாடும் பதிப்பொருளும், ஏங்குதல் இல்லாத சாந்தமூர்த்திகளின் உள்ளத்தில் எழுந்தருளும் இறைவனும், எனக்குக் குருவும் எல்லாமாகியும் அல்லதுமாகியும் விளங்குகின்ற மெய்ப்பொருளாகிய பரசிவமே! சொல்லின் எல்லையும் மனநினைவுகளின் எல்லையும் மதிப்பெல்லையும் அதன் வாதனை எல்லையும் கடந்து அறிவாய் விளங்கி நின்ற இடத்தும் போக்குவரவு இன்றிக் குறைவற நிறைந்ததாய் அதுவும் கடந்துள்ளதாகிய எனது மெய்ந்நிலையை எடுத்துரைப்பது எவ்வாறே. எ.று
எங்கும் நீக்கமின்றி நிறைந்திருப்பது மெய்ம்மை நிலையாதலின் அதனை, “மெய்ந்நிலை” என்று கூறுகின்றார். ஞானத்தால் உணரப்படுவது நேயப் பொருளாதலின், நேயமாவது பரசிவமாதலின் அதனை, “என்னுடைய நேயமே” என்று கூறுகின்றார். மிகினும் குறையினும் ஏக்கமின்றி இருப்பவர் சாந்தமூர்த்திகளாகிய பெரியோராதலால் அவர்களை, “ஏக்கொழிந்தார்” என்று கூறுகின்றார். வாக்கு மனம் இரண்டினும் கலத்த அறிவை, “மதி” யென்றும், அது முக்குணங்களும் கலந்து சுகதுக்க மோகம் என்னும் மூவகை வாதனைகளை அடைவது பற்றி, “மதியின் வாதனை” என்றும் கூறுகின்றார். போக்குவரவு - ஒடுங்குதலும் தோன்றுதலும். போக்குவரவுகளின் எல்லையைக் கடந்த நிலை பரிபூரணம் என்பது பற்றி, “பூரணமாய்” எனப் புகல்கின்றார். இதனால் கரண எல்லையைக் கடந்து போக்குவரவுமின்றிப் பூரணமாய் அப்பூரண நிலையும் கடந்துள்ளது பரசிவமாதலின் அந்த எல்லையை அடைந்தறிந்து உரைக்கும் ஆற்றல் இல்லாமை பற்றி, “உள்ளபடி புகலுவது எப்படியோ”என்று கூறியவாறாம். (9)
|