5476. என்இயலே யான்அறியேன் இவ்வுலகின் இயல்ஓர்
எள்அளவும் தான்அறியேன் எல்லாமும் உடையோய்
நின்இயலை அறிவேனோ அறிந்தவனே போல
நிகழ்த்துகின்றேன் பிள்ளைஎன நிலைப்பெயர்பெற் றிருந்தேன்
தன்இயலாம் தனிஞான சபைத்தலைமைப் பதியே
சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம்
பின்இயல்மா னிடப்பிள்ளை பேச்சினும்ஓர் பறவைப்
பிறப்பின்உறும் கிளிப்பிள்ளைப் பேச்சுவக்கின் றதுவே.
உரை: தன்னியல்பால் விளங்குகின்ற தனித்த ஞான சபைக்குத் தலைவனாய் நிலவும் பதிப்பொருளும் என்றும் உள்பொருளும் நித்தியப் பொருளும் தயாநிதியுமாகிய சிவனே! உலகம் தனது இயல்பின்படி மக்களினத்துப் பிள்ளைகள் பேசினும் ஒரு பறவைப் பிறப்பிலுள்ள கிளிப்பிள்ளை பேச்சைக் கேட்டு மகிழ்கின்றது; அதுபோல நானும் இராமலிங்கப் பிள்ளை என நிலையாக அமைந்த பெயர் பெற்றிருக்கின்றேன்; அதனால் என்னுடைய பேச்சையும் நீ கேட்டு மகிழ்தல் வேண்டும்; ஆனால் யானோ என்னுடைய இயல்பையே அறியாதவனாதலால் இவ்வுலகில் இயல்பை எள்ளளவும் யான் அறிகின்றிலேன்; நீயோ எல்லாவற்றையும் அறிந்துடையவன்; அதனால் உனது இயல்பை முற்றவும் அறியேனாதலால் அறிந்தவன்போல உரைக்கின்றேன்; எனது உரையை ஏற்றருளுக. எ.று.
மக்கட்பிறப்பின் இயல்பையும் குணஞ் செயல் வகைகளையும் முற்ற உணராமை புலப்பட, “என் இயல்பே யான் அறியேன்” என்று இயம்புகின்றார். மக்கள் இயலையும் மக்கள் நிறைந்த உலகின் இயலையும் முற்றவும் நன்குணர்ந்த பெரும்பொருள் என்பது விளங்க, “எல்லாமும் உடையோய்” என்று கூறுகின்றார். நிலைப்பெயர் - பெற்றோர்கள் இட்ட நிலைத்த பெயர். சத்தாகிய உள்பொருள் என்பதற்கு, ”சத்தியன்” எனவும், என்றும் உள்ள பொருள் என்பதற்கு, “நித்தியன்” எனவும், அருளே உருவாகியவன் என்பது விளங்க, “தயாநிதியே” எனவும் உரைக்கின்றார். இதனால் எல்லாம் அறிந்துடைய சிவபரம் பொருளின் இயல்பை யான் அறியேனாயினும் அறிந்தவன் போல உரைக்கின்றேன்; இதனை ஏற்றருளல் வேண்டும்; ஒன்றும் அறியாத கிளிப்பிள்ளை பேசினும் அதனைக் கேட்டு மகிழ்வது யான் உறையும் உலகத்தின் இயல்பு என்று எடுத்துக் காட்டியவாறாம். (10)
|