128. உற்றதுரைத்தல்

    அஃதாவது, தம்மிடத்துப் பொருந்திய இயல்புகளை எடுத்தோதித் தமக்கு அருள் ஞானம் வழங்குமாறு இறைவனை வேண்டுவதாம். இங்கு வரும் பாட்டுக்கள் பத்தும் பாராயணத்துக்குரிய வகையில் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5477.

     துனிநாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன்
          தூக்கம் தவிர்த்தேன் சுகம்பலிக்கும்
     கனிநாள் இதுவே என்றறிந்தேன்
          கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன்
     தனிநா யகனே கனகசபைத்
          தலைவா ஞான சபாபதியே
     இனிநான் இறையும் கலக்கமுறேன்
          இளைக்க மாட்டேன் எனக்கருளே.

உரை:

     ஒப்பற்ற நாயகனும் பொற் சபைக்குத் தலைவனும் ஞான சபைக்குப் பதியுமாகிய சிவபெருமானே! வெறுப்புணர்ச்சி மிக்கு நிலவும் நாட்கள் அனைத்தையும் கழித்து விட்டேன்; தூக்கத்தையும் நீக்கி விட்டேன்; அருட் சுகம் கைவரும் இன்பம் கனியும் நாளும் இதுவே என்று அறிந்து மனமுவந்து களிப்புற்றேன்; ஆதலால் இனி நான் சிறிதும் கலக்கமும் கொள்ளேன்; மேனி இளைக்கவும் மாட்டேன்; ஆதலால் எனக்கு அருள் புரிவாயாக. எ.று.

     வெறுப்புணர்ச்சிமிக்க துன்பக் காலத்தை, “துனி நாள்” என்று உரைக்கின்றார். அருள் பெறுநாள் என்றோ என விழித்திருக்கின்றேன் என்பாராய், “தூக்கம் தவிர்த்தேன்” என்று சொல்லுகின்றார். இன்பம் நிறைந்த நாள் “கனி நாள்” எனப்படுகின்றது. இறையும் கலக்கமுறேன் என்றவிடத்தில், கலக்கம் தடுமாற்றம் குறித்து நின்றது. இளைக்க மாட்டேன் என்பதினால் திருவருளைப் பெறும் வரையில் முயற்சி குன்றாது இருப்பேன் என உணர்த்துகின்றது. இறையும் - சிறிதும்.

     (1)