5478.

     அருளும் பொருளும் யான்பெறவே
          அடுத்த தருணம் இதுஎன்றே
     தெருளும் படிநின் அருள்உணர்த்தத்
          தெரிந்தேன் துன்பத் திகைப்பொழிந்தேன்
     மருளும் மனந்தான் என்னுடைய
          வசத்தே நின்று வயங்கியதால்
     இருளும் தொலைந்த தினிச்சிறிதும்
          இளைக்க மாட்டேன் எனக்கருளே.

உரை:

     திருவருள் ஞானமும் மெய்ப்பொருளும் யான் பெறுமாறு அமைந்த தருணம் இதுவேயென்று யான் தெளியும் படி உன்னுடைய திருவருள் என்னுள் இருந்து உணர்த்த உணர்ந்துகொண்டேன்; என் மனமும் திகைப்பின்றித் தூய நிலையில் திளைக்கின்றது; மருளுகின்ற என் மனமும் என் வசமே நிற்கின்றது; என் அறிவில் படர்ந்திருந்த அறியாமையும் போய்விட்டபடியால் இனி நான் சிறிதும் தளரமாட்டேன்; ஆதலால் எனக்கு அருள் புரிக. எ.று.

     அருள் என்றது திருவருள் ஞானத்தை. அடுத்த தருணம் - ஏற்ற சமயம். தெருளுதல் - தெளிதல். துன்பத் திகைப்பு - துன்பத்தால் உண்டாகும் மனமயக்கம். வயங்குதல் - விளங்குதல். இருள் - அறியாமை.

     (2)