5479.

     அருளே உணர்த்த அறிந்துகொண்டேன்
          அடுத்த தருணம் இதுஎன்றே
     இருளே தொலைந்த திடர்அனைத்தும்
          எனைவிட் டகன்றே ஒழிந்தனவால்
     தெருளே சிற்றம் பலத்தாடும்
          சிவமே எல்லாம் செய்யவல்ல
     பொருளே இனிநான் வீண்போது
          போக்க மாட்டேன் கண்டாயே

உரை:

     அருட் பேற்றுக்குரிய காலம் இதுவே என்று இறைவனுடைய அருட் சத்தி உள்ளிருந்து உணர்த்த அறிந்து கொண்டேனாதலால் என்னைப் பற்றி இருந்த அஞ்ஞான இருள் நீங்கிற்று; துன்பங்கள் அனைத்தும் என்னை விட்டு விலகி விட்டன; தெளிவாக விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தில் ஆடல் புரிகின்ற சிவபெருமானும் எல்லாம் செயல் வல்ல பரம்பொருளுமாகிய சிவமே! இனி நான் ஒரு பொழுதும் வீணாய் கழிக்க மாட்டேன்; எனக்கு அருளுவாயாக. எ.று.

     சிவசத்தியாகிய திருவருள் உணர்த்தினாலன்றி உயிர்கட்கு உணர்வு எழாதாதலால், “அடுத்த தருணம் இதுவென்றே அருளே உணர்த்த அறிந்து கொண்டேன்” எனக் கூறுகின்றார். இடர் விளைவிக்கும் உலகியல்மாயை ஒழிந்துவிட்டது என்பாராய், “இடர் அனைத்தும் என்னைவிட்டு அகன்றொழிந்தன” என உரைக்கின்றார். தெருளே என்பதைச் சிவத்துக்கு ஏற்றித் தெருளே உருவாக உடைய சிவ பரம்பொருளே என்பதும் உண்டு. ஆல் -அசை. கண்டாய் என்பது முன்னிலை அசை.

     (3)