5480.

     கண்டே களிக்கும் பின்பாட்டுக்
          காலை இதுஎன் றருள்உணர்த்தக்
     கொண்டே அறிந்து கொண்டேன்நல்
          குறிகள் பலவுங் கூடுகின்ற
     தொண்டே புரிவார்க் கருளும்அருட்
          சோதிக் கருணைப் பெருமானே
     உண்டேன் அமுதம் உண்கின்றேன்
          உண்பேன் துன்பை ஒழித்தேனே.

உரை:

     தொண்டு செய்கின்ற பெருமக்களுக்கு மெய்ம்மை ஞானம் தந்தருளும் அருட் சோதியை உடைய கருணாமூர்த்தியாகிய சிவனே! உன்னை நேரிற்கண்டு மகிழ்ந்து பின்னர் பாடுகின்ற துயிலெடைக்காலம் இதுவாகும் என்று நின்னுடைய திருவருள் உணர்த்த மனம் கொண்டு அறிந்துகொண்டேன்; நல்ல குறிகள் பலவும் எதிரே தோன்றுகின்றன; யானும் திருவருள் அமுதத்தை முன்னும் உண்டேன்; இப்பொழுதும் உண்கின்றேன்; இனியும் உண்பேன்; இதனால் துன்பத்தையும் போக்கி விட்டேன்; ஆதலால் உனது திருவருளை நல்குவாயாக எ.று.

     பின்பாட்டுக் காலை - விடியற் காலையில் துயிலெழப் பாடும் பள்ளி எழுச்சிக் காலம். அருட்பேறு - அருள் ஞானப் பேறு. இனிப் பொய்யாது என்பதினால் “அருள் உணர்த்தக் கொண்டு அறிந்து கொண்டேன்” என்று மொழிகின்றார். நல்குறிகள் - நல்ல சகுணங்கள் கூடுதல் - நேர்படுதல்.

     (4)