5481.

     ஒழித்தேன் அவலம் அச்சம்எலாம்
          ஓடத் துறந்தேன் உறுகண்எலாம்
     கழித்தேன் மரணக் களைப்பற்றேன்
          களித்தேன் பிறவிக் கடல்கடந்தேன்
     பழித்தேன் சிற்றம்பலம் என்னாப்
          பாட்டை மறந்தேன் பரம்பரத்தே
     விழித்தேன் கருத்தின் படிஎல்லாம்
          விளையா டுதற்கு விரைந்தேனே.

உரை:

     அவலக் கவலைகளை நீங்கினேன்; அச்சங்கள் எல்லாம் நீங்குமாறு போக்கினேன்; துன்பங்கள் எல்லாவற்றையும் கழித்து விட்டு மரணத்தால் உண்டாகும் இளைப்பையும் போக்கினேன்; பிறவிக் கடலைக் கடந்து மகிழ்ந்தேன்; திருச்சிற்றம்பலத்தைப் பொருளாகக் கொள்ளாத பாட்டை விலக்கினேன்; மேலும் அவற்றை மறந்து பரம்பொருள் ஞானத்தை நோக்கினேன்; நின் திருவுள்ளக் கருத்தின்படியே எல்லாம் செய்தற்கு முற்பட்டேன். எ.று.

     அவலம் - கவலையால் உண்டாகும் மெலிவு. உறுகண் - துன்பங்களால் உண்டாகும் இடையூறு. மரணக் களைப்பு - மரணத்தை நினைப்பதால் உண்டாகும் மேனி மெலிவு. திருச்சிற்றம்பலத்தைப் பொருளாகக் கொள்ளாத பாட்டுக்களை இகழ்வதோடு நெஞ்சில் இல்லாதபடி நடந்தேன் என்பாராய், “சிற்றம்பலம் என்னாப் பாட்டைப் பழித்தேன் மறந்தேன்” என்று கூறுகின்றார். பழித்தேன் என்பது முற்றெச்சம். பரம்பரம் - ஈண்டு மேலான ஞானத்தைக் குறித்து நின்றது. விளையாடுதல் - செய்தல். விரைதல் - முந்துறுதல்.

     (5)