5482. விரைந்து விரைந்து படிகடந்தேன்
மேற்பால் அமுதம் வியந்துண்டேன்
கரைந்து கரைந்து மனம்உருகக்
கண்ணீர் பெருகக் கருத்தலர்ந்தே
வரைந்து ஞான மணம்பொங்க
மணிமன் றரசைக் கண்டுகொண்டேன்
திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும்
செழும்பொன் உடம்பாய் திகழ்ந்தேனே.
உரை: திருவருள் ஞானப் பேற்றுக்குரிய படிகளை முறையே கடந்து சென்று மேலே உள்ளதாகிய அருளமுதத்தை வியந்து உண்டு மகிழ்ந்தேன்; என்னுடைய மனம் மிகவும் கரைந்து உருகவும் கண்ணீர் பெருகவும் மணம் மிகுந்து ஞான மணம் பெருக அழகிய அம்பலத்தில் எழுந்தருளும் கூத்தப் பெருமானைக் கண்டு சுருங்கி நெகிழ்ந்த தோல் மூடிய இவ்வுடம்பும் சிறந்த பொன்மயமான உடம்பாய் விளங்கினேன். எ.று.
அருள் பேற்றுக்குரிய நெறி முறைகளைக் கடந்து சென்றமை தோன்ற, “விரைந்து விரைந்து படி கடந்தேன்” என்று விளம்புகின்றார். கருத்து மலர்தலாவது தன்னலமாகிய கோள் இன்றி விரிதல். அம்பலத்தில் ஆடுகின்ற பெருமானே “மணிமன்று அரசு” எனச் சொல்லி மகிழ்கின்றார். திரைதல் - சுருங்குதல். திரையுற்று மெலிந்த தூல உடம்பு பொன்னிற உடம்பாயிற்று என்பார், “திரைந்து நெகிழ்ந்த தோல் உடம்பும் செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேன்” என்று செப்புகின்றார். (6)
|