5485. அகத்தே கறுத்துப் புறத்துவெளுத்
திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருந்திச் சன்மார்க்க
சங்கத் தடைவித் திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந்
திடுதற் கென்றே எனைஇந்த
உகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன் அருளைப் பெற்றேனே.
உரை: மனத்தில் தீய எண்ணங்களால் அழுக்குற்றுப் புறத்தே தூயவர் போல ஒழுகுகின்ற மக்கள் அனைவரையும் திருத்திச் சன்மார்க்க சங்கத்தில் சேர்க்கவும், அவர்களும் இவ்வுலக வாழ்க்கையிலேயே மேலுலக இன்பத்தைப் பெறுவித்திடுதற்கு என்றே என்னை இந்தக் காலத்தில் இறைவன் வருவிக்க வந்து அவனது திருவருளைப் பெற்றுள்ளேன். எ.று.
மனத்தால் பொல்லாதவராய் வெளியே பார்ப்பதற்கு நல்லவராய் விளங்குபவர்களை, “அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர்” என்று உரைக்கின்றார். சகம் - உலகம். சன்மார்க்க ஞானம் நன்கு பரவினாலன்றி இவர்கள் உய்தி பெறார் என்பது பற்றி, “சன்மார்க்க சங்கத்து அடைவித்திட” எனவும், இம்மையிலேயே பரலோக இன்பத்தைப் பெற்று மகிழ்வித்தற்கு என்றே தன்னை இறைவன் பிறப்பித்துள்ளான் என்பாராய், “இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற் கென்றே என்னை இறைவன் வருவிக்க உற்றேன்” எனவும் கூறுகின்றார். இறைவன் பிறப்பிக்கப் பிறந்தாலும் அவனுடைய திருவருள் பேறு இன்றியமையாது என்பதை வற்புறுத்த வேண்டி, “அருளைப் பெற்றேனே” என்று அறிவிக்கின்றார். (9)
|