5486. பெற்றேன் என்றும் இறவாமை
பேதம் தவிர்ந்தே இறைவன்எனை
உற்றே கலந்தான் நானவனை
உற்றே கலந்தேன் ஒன்றானேம்
எற்றே அடியேன் செய்ததவம்
யாரோ புரிந்தார் இன்னமுதம்
துற்றே உலகீர் நீவிர்எலாம்
வாழ்க வாழ்க துனிஅற்றே.
உரை: அடியேன் எக்காலத்தும் சாவா வரத்தைப் பெற்றுக் கொண்டேன்; அன்றியும் அவனினும் வேறாய் இருக்கின்ற எனது வேறுபாட்டைப் போக்கி இறைவனாகிய சிவன் என்பால் வந்து என்னுட் கலந்து கொண்டான்; நானும் அவனைக் கூடிக் கலந்து கொண்டேன்; நாங்கள் இருவரும் ஒன்றாகி விட்டோம்; இவ்வகையில் அடியேன் போல உயர்ந்த தவத்தைச் செய்தவர் யாவர்; இனி உலகத்தவர்களாகிய நீங்கள் எல்லாம் அவனது திருவருளாகிய இனிய அமுதத்தை உண்டு விருப்பு வெறுப்பற்று இனிது வாழ்வீர்களாக. எ.று.
பேதம் - சிவன் சீவன் என்ற வேறுபாடு. சிவனே நான் - நானே சிவம் என்று சொல்லுமாறு ஒன்றி விட்டோம் என்பார், “ஒன்றானேன்” என்று உரைக்கின்றார். எற்றே - என்னே. துற்றல் - உண்ணுதல். துனி என்று கூறினாரேனும் விருப்பும் கூறியதாகக் கொள்க. விருப்பும் வெறுப்புமாகிய இரண்டும் அற்றாலொழிய இன்ப வாழ்வு அமையாது என அறிக. (10)
|