129. சுத்த சிவநிலை
அஃதாவது தத்துவாதீதனாகிய சிவத்தின் தனி முதன்மை உயிர்களோடு தொடர்புறும் நிலையைக் கூறுவதாம். சுத்த சிவம் என்பது நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியானந்தனாய் தற்பரமாய் உள்ள தனிமுதற் சிவ பரம்பொருள். அஃது உயிர்களோடு ஒன்றாயும் உடனாயும் கலந்துறையும் நிலை இங்கே சுத்த சிவநிலை எனப்படுகிறது.
நேரிசை வெண்பா 5487. கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்
எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்
கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து.
உரை: பார்க்கும் கண்ணிலும் கருதும் கருத்திலும் எண்ணும் எண்ணத்திலும் கலந்திருக்கும் முதல்வன் நான் பாடும் பாட்டின் இசையிலும் பாட்டிலும் கருணை நிறைந்து என் உயிரிலும் கலந்துறைகின்றான். எ.று.
பண் - பாட்டில் அமைந்த இசை. பாடும் செயலில் ஈடுபடும் உயிரோடு கலந்து அருட் சத்தியோடு கூடி என் பாட்டிலும் இசையிலும் ஒன்றாய்க் கலந்துள்ளான் என்பது விளங்க, “கருணை கலந்து பண்ணிற் கலந்தான் பாட்டிற் கலந்தான் உயிரிற் கலந்தான்” என்று உரைக்கின்றார். (1)
|