5488.

          எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான்
          எல்லாம் செயவல்லான் எம்பெருமான் - எல்லாமாய்
          நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான்
          ஒன்றாகி நின்றான் உவந்து.

உரை:

     எல்லாமாய் நிற்கின்ற சிவபெருமான் அம்பலத்தில் ஆடல் புரிவதும், உயிர்களோடு ஒன்றாய் உவந்து கலந்திருப்பதும், எல்லாம் செய்ய வல்லவனாதலும், எனக்குப் பெருமானாதலும் உடையவன் ஆதலால் எனக்கு நலங்கள் யாவற்றையும் கொடுக்கின்றான். எ.று.

     எல்லாம் செய்ய வல்லவனாகிய எம்பெருமான் எல்லாமாய் நிற்பினும் என்னுள் ஒன்றாகி உவந்து நிற்கின்றான் என்பது கருத்து.

     (2)