5489.

          எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
          பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் - உண்ணுகின்றேன்
          தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான்
          வள்ளல்நட ராயன் மகிழ்ந்து.

உரை:

     வள்ளலாகிய கூத்தப்பெருமான் என் மனம் தெளிவுறும் படித் தருகின்றானாதலால் அவன் தருகின்ற அருளமுதத்தை அருந்துகின்றேன்; அவனும் நான் எண்ணுகின்ற எண்ணங்கள் எல்லாவற்றையும் எண்ணியவாறு தந்து நான் பண்ணுகின்ற பாடல்களில் பண் அமைய நிறுத்திப் பாடுகின்றான். எ.று.

     உள்ளம் தெளியத் தருகின்றானாதலின் திருவருள் அமுதத்தை நானும் உண்கின்றேன்; அவனும் என் எண்ணங்கள் கைவரச் செய்கின்றான்; பண்ணுகின்ற பாடலையும் பண் அமைத்துப் பாடுகின்றான் என்பது கருத்து.

     (3)