5490. சித்தியெலாந் தந்தே திருவம் பலத்தாடும்
நித்தியனென் உள்ளே நிறைகின்றான் - சத்தியம்ஈ
தந்தோ உலகீர் அறியீரோ நீவிரெலாம்
சந்தோட மாய்இருமின் சார்ந்து.
உரை: அம்பலத்தில் ஆடுகின்ற பரமனாகிய நித்தப் பொருள் எனக்குச் சித்திகள் எல்லாவற்றையும் தந்து என் உள்ளத்தில் நிறைந்திருக்கின்றான்; நான் சொல்லும் இது சத்தியம்; இதனை நீங்கள் அறியமாட்டீர்களோ? நீங்கள் எல்லோரும் என்பால் அடைந்து மகிழ்வோடு இருப்பீர்களாக. எ.று.
சித்திகள் - கன்மயோக ஞான சித்திகள். அம்பலத்தாடும் எம்பெருமான் என்னுள்ளே நிறைந்திருப்பதை நீவிர் அறியீர் போலும்; இனியேனும் அறிந்து என்பால் அடைந்து மகிழ்வோடு இருப்பீர்களாக என உரைத்தவாறாம். (4)
|