5491. அய்யாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
எய்யேன் மகனேஎன் றெய்துகின்றான் - ஐயோஎன்
அப்பன் பெருங்கருணை யார்க்குண் டுலகத்தீர்
செப்பமுடன் போற்றுமினோ சேர்ந்து.
உரை: உலகத்து நன்மக்களே! ஐயனே என்று ஒருபொழுது நான் அழைப்பேனாயின் அப்பொழுதே மகனே நான் அறிந்திலேன் எனச் சொல்லிக்கொண்டு என்பால் வந்து அடைகின்றான்; ஆகவே எனக்கு அப்பனாகிய பெருமானுடைய பெருங் கருணை யார்க்கு இருக்கின்றது; ஒருவர்க்கும் இல்லை; ஆதலால் நேர்மையுடன் என்னோடு சேர்ந்து அவனைப் போற்றுவீர்களாக. எ.று.
அறியாமையே இல்லாதவன் என உலகியலுக்கு ஒப்ப உரைக்கின்றாராதலால், “அப்பொழுதே எய்யேன் என்று எய்துகின்றான்” என மொழிகின்றார். செப்பம் - செம்மை. செம்மை சான்ற மனம் இல்வழிப் போற்றுதல் அமையாதாதலின், “செப்பமுடன் போற்றுமினோ” என்று உரைக்கின்றார். (5)
|