5493. தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்
தானே எனக்குத் தருகின்றான் - தானேநான்
ஆகப் பிரிந்தானென் அப்பன் பெருங்கருணை
மேகத்திற் குண்டோ விளம்பு.
உரை: நான் சிவமாகத் திருவருள் புரியும் அப்பனாகிய பெருமான், தானாகவே என்பால் வந்து என்னை அடைந்து கலந்து கொள்வதோடு தன்னையே எனக்குத் தருகின்றமையால் அவனது பெருங் கருணை வானத்துலவும் மேகங்களுக்கும் உண்டோ சொல்லுமின். எ.று.
நான் அழையாமலே தானே வந்து அருள் புரிபவனாகிய சிவபெருமான் நான் சிவமாக உவந்தருளுகின்றான் என்பது கருத்து. பெருங் கருணைக்கு உவமையாகிய மேகத்தினிடத்தும் அவனைப்போல் கருணை புரியும் இயல்பில்லை என்பது விளங்க, “பெருங் கருணை மேகத்திற்கு உண்டோ விளம்பு” என்று கூறுகின்றார். (7)
|