5494. பாலும் கொடுத்தான் பதிதிறக்கும் ஓர்திறவுக்
கோலும் கொடுத்தான் குணங்கொடுத்தான் - காலும்
தலையும் அறியும் தரமும் கொடுத்தான்
நிலையும் கொடுத்தான் நிறைந்து
உரை: உண்ணற்கினிய பாலும் அந்தப் பாலிருக்கும் இடத்துக்கும் வேண்டிய திறவுகோலையும் கொடுத்துக் கெடாமல் உண்ணுதற்குரிய நற்குணமும் கொடுத்தருளிய பரமன் தனது அடியும் முடியும் அறிதற்கு இன்றியமையாத அறிவும் கொடுத்தருளி அதன் பிறகு எய்துதற்குரிய சுத்த சிவநிலையையும் என்னுள் நிறைந்து கொடுத்தருளினான். எ.று.
பால் என்றது ஞானப் பாலை; அதனால் விளையும் அருள் ஞானத்தைத் “திறவுகோல்” என்று செப்புகின்றார். திருவடி ஞானத்தையும் முடி அடைதற்குரிய சிவஞானத்தையும் தந்தமை விளங்க, “காலும் தலையும் அறிவும் தரமும் கொடுத்தான்” என்று கூறுகின்றார். இரு ஞானங்களாலும் பெறலானது சுத்த சிவநிலையாதலால், “நிலையும் நிறைந்து கொடுத்தான்” என்று உரைக்கின்றார். (8)
|