5495.

          வெவ்வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே
          செவ்வைஅறி வின்பம் சிறந்தனவே - எவ்வயினும்
          ஆனான்சிற் றம்பலத்தே ஆடுகின்றான் தண்அருளாம்
          தேன்நான்உண் டோங்கியது தேர்ந்து.

உரை:

     எவ்விடத்தும் உள்ளவனும் திருச்சிற்றம்பலத்தில் உள்ளவனுமாகிய சிவபெருமான் தன்னுடைய திருவருள் ஞானமாகிய தேனை உண்டு நான் உயர்ந்ததை அறிந்ததினால் கொடிய வினைகளும் உலகியல் மாயையின் விளைவும் என்னை விட்டு நீங்கினதோடு செம்மையான ஞான இன்பமும் எனக்குச் சிறந்து விளங்குகின்றன. எ.று.

     தண்ணருளாம் தேன் - குளிர்ந்த திருவருள் ஞானமாகிய தேன். திருவருள் ஞானத்தாலன்றி நீங்காத வெம்மை உடையவையாதலால் வினைகளை, “வெவ்வினை” என்று கூறுகின்றார். மாயை விளைவு - மாயாகாரியமாகிய உலகியல் உண்டுபண்ணும் மயக்கம். எவ்வாற்றானும் கெடாத இயல்பினதாகலான் ஞானானந்தத்தை “செவ்வை அறிவின்பம்” என்று சிறப்பிக்கின்றார். “வினையால் அசந்து விளைதலால் ஞானம் வினை தீரினன்றி விளையாவாம்” என்று சிவஞான போதம் கூறுவது காண்க.

     (9)