5496. வஞ்சவினை எல்லாம் மடிந்தனவன் மாயைஇருள்
அஞ்சிஎனை விட்டே அகன்றனவால் - எஞ்சலிலா
இன்பமெலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால்
துன்பமெலாம் போன தொலைந்து.
உரை: வஞ்சனையைச் செய்கின்ற வினை வகைகள் எல்லாம் ஒழிந்தன; வன்மை மிக்க மாயையாகிய மயக்கங்கள் தமக்குள் பயந்து என்னை விட்டு நீங்கிவிட்டன; துன்பங்களும் என்னை விட்டுப் போய் விட்டன; இவ்வகையால் குறைவில்லாத இன்பங்கள் யாவும் நிறைந்துள்ளன. எ.று.
உயிரறிவை மறைத்துத் துன்பத்திற் குள்ளாக்குவதால் வினைகளை, “வஞ்ச வினை” என்று குறிக்கின்றார். மாயை விளைவிக்கும் மயக்கங்களை “இருள்” என்று கூறுகின்றார். எஞ்சல் - குறைதல். போயின என்பது போன என வந்தது. தொலைந்து போன என்பதனால் துன்ப வகைகள் யாவும் மீளத் தலையெடாதபடி ஒழிந்தன என்பது கருத்து. (10)
|