5497.

          அம்மை திரோதை அகன்றாள் எனைவிரும்பி
          அம்மையருட் சக்தி அடைந்தனளே - இம்மையிலே
          மாமாயை நீங்கினன்பொன் வண்ணவடி வுற்றதென்றும்
          சாமா றிலைஎனக்குத் தான்.

உரை:

     அம்மையாகிய திரோதான சத்தி என்னை விட்டு நீங்கினளாகத் திருவருளாகிய ஞான சத்தி என்பால் வந்து அடைந்தாள்; அவளுடைய வரவால் சுத்த மாயையாகிய மாமாயை நீங்கினதால் எனக்குப் பொன்மை நிற அழகிய வடிவு வந்துளது; அதனால் என் உயிர்க்குச் சாகும் திறமில்லை. எ.று.

     அறிவை மறைப்பதாகிய திரோதான சத்தியை, “அம்மை திரோதை” என்றும், இன்பம் தரும் ஞான சத்தியை, “அம்மை அருட் சத்தி” என்றும் கூறுகின்றார். மாமாயை - உலகியல் மயக்கத்தை விளைவிக்கும் சுத்த மாயா சத்தி நீங்கினமை புலப்பட, “இம்மையிலே மாமாயை நீங்கினள்” என்றும் சத்துவ தூய வடிவாதலின் தாம் எய்திய வடிவை, “பொன் வண்ண வடிவு” என்றும் கூறுகின்றார். உயிர் அழிவில்லாத நித்தப் பொருளாதலின், “என்றும் எனக்குச் சாமாறு இலை” என்று மொழிகின்றார்.

     (11)