5498. நானே தவம்புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன்
தானேவந் தென்னைத் தடுத்தாண்டான் - ஊனே
புகுந்தான்என் உள்ளம் புகுந்தான் உயிரில்
புகுந்தான் கருணை புரிந்து.
உரை: உலகத்தவரே! அம்பலத்தில் ஆடுகின்ற சிவபெருமான் தானே மகிழ்ந்து என்பால் வந்து என்னைத் தடுத்து ஆட்கொண்டு கருணை மிகுந்து என் உடம்புள்ளும் உள்ளத்தினுள்ளும் உயிருனுள்ளும் புகுந்துகொண்டான்: ஆதலால் நானே மிக்க தவம் புரிந்தவனாயினேன். எ.று.
நானிலம் - குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் ஆகிய நான்கையும் கொண்ட நிலவுலகம். பாலை நிலத்தை நீக்கி “நானிலம்” என்று சொல்லுகின்றார். பாலை சிறப்புடையதன்று என்பது கருத்து. உலகியல் மயக்கத்தில் வீழ்ந்து மயங்காதபடி என்னைத் தடுத்து ஆண்டருளியதோடு என் உடம்பிலும் உயிரிலும் புகுந்து கலந்து கொண்டானாதலால் நான் மீளவும் உலகியல் மயக்கத்தில் மருளமாட்டேன் என்பாராய், “நானே தவம் புரிந்தேன்” என்று கூறுகின்றார். (12)
|