5499.

          ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு
          நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன் - நன்றேமெய்ச்
          சித்தியெலாம் பெற்றேன் திருஅம்ப லத்தாடி
          பத்திஎலாம் பெற்ற பலன்.

உரை:

     திருச்சிற்றம்பலத்தில் ஆடுகின்ற பெருமானிடத்து நான் மிக்க பக்தி கொண்டதின் பயனாகச் சிவம் ஒன்றே மெய்ப்பொருள் என்று உணர்ந்த பொழுதே சிவஞானமாகிய செம்மை நெறியில் நின்று மெய்ம்மை பொருந்திய சித்திகள் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டேன். எ.று.

     அம்பலவாணன்பால் கொண்ட பக்தியினால் சிவம் ஒன்றே பரம்பொருள் என்பது உணர்ந்து சிவஞானச் செம்மை நிலைபெற்றுச் சித்திகள் எல்லாவற்றையும் பெற்று மகிழ்கின்றேன் என்பது கருத்து.

     (13)