5500. தூக்கங் கெடுத்தான் சுகம்கொடுத்தான் என்னுளத்தே
எக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - ஆக்கமிகத்
தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க
வந்தான்என் அப்பன் மகிழ்ந்து.
உரை: என்னைப் பெற்ற தந்தையே என்று ஒருகால் நான் அழைத்தபோது எனக்கு அப்பனாகிய சிவபெருமான் என் தூக்கத்தைப் போக்கித் தனது அருள் இன்பத்தை எனக்குக் கொடுத்து எனது ஏக்கத்தைப் போக்கிஎன் அறிவிற் படிந்த அறியாமையை நீக்கி அருளித் தனது அருட் செல்வத்தைத் தந்தருளினான். எ.று.
எனக்குத் தந்தை என்பது உணர்ந்து நான் அழைத்தபோது என்பால் விருப்பமுடன் வந்தான் என்பாராய், “எனை ஈன்ற தந்தையே என்று நான் அழைக்க என் அப்பன் மகிழ்ந்து வந்தான்” என்று இயம்புகின்றார். தூக்கம் - சோம்பல். சுகம் - தனது அருளால் உண்டாகின்ற இன்பம். இருள் - அஞ்ஞான இருள். (14)
|