5501.

          வட்டமெலாம் தீர்த்தான் மகிழ்வளித்தான் மெய்ஞ்ஞான
          நாட்டமெலாம் தந்தான் நலங்கொடுத்தான் ஆட்டமெலாம்
          ஆடுகநீ என்றான்தன் ஆனந்த வார்கழலைப்
          பாடுகநீ என்றான் பரன்.

உரை:

     மேலானவனாகிய சிவபெருமான் எனக்குண்டாகிய மெலிவெல்லாம் போக்கி என்னையும் மகிழ்வித்து மெய்ம்மை பொருந்திய ஞான நாட்டத்தை எனக்கு நல்கி நலம் கொடுத்து நான் ஆடும் ஆட்டத்தை நீயும் ஆடுக என்றும் தன்னுடைய இன்பம் தரும் ஆனந்தத் திருவடியை ஆடுவாயாக என்றும் சொல்லி அருளினான். எ.று.

     வாட்டம் - உலகியல் மயக்கத்தில் கிடந்து வருந்திய மெலிவு. உலகியல் போகங்களை நாடாது சிவஞானத்தையே நாடுமாறு செய்தது பற்றி, “மெய்ஞ்ஞான நாட்டமெலாம் தந்தான்” என்று சொல்லுகின்றார். ஆட்டம் - அம்பலத்தில் பரமன் ஆடுகிற திருக்கூத்து.

     (15)