5502. தான்நான் எனும்பேதந் தன்னைத் தவிர்த்தான்நான்
ஆனான்சிற் றம்பலவன் அந்தோநான் - வானாடர்
செய்தற் கரியதவம் செய்தேன் மகிழ்கின்றேன்
எய்தற் கரியசுகம் ஏய்ந்து.
உரை: உலகில் உயிர்கள் பெறுதற்கரிய ஞான இன்பத்தைப் பொருந்தி நான் மகிழுமாறு சிவம் எனவும் சீவன் எனவும் வேறாக நிற்கின்ற வேற்றுமையைப் போக்கிச் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற அந்தச் சிவபெருமான் என்னுட் கலந்து நானாயினான்; இதனால் தேவர் உலகத்துத் தேவர்களும் செய்தற்கரிய தவத்தைச் செய்து செய்தவனாயினேன். எ.று.
சிவன் என்றும் சீவன் என்றும் பிரிந்து நிற்கின்ற வேற்றுமை நிலையை, “தான் நான் எனும் பேதம்” என்று கூறுகின்றார். உயிரில் கலந்து ஒன்றாயினமை புலப்பட, “நான் ஆனான் சிற்றம்பலவன்” என்று விளம்புகின்றார். சிவபோகத்தில் திளைக்கின்றமை விளங்க, “எய்தற்கரிய சுகம் ஏய்ந்து மகிழ்கின்றேன்” என உரைக்கின்றார். ஏய்தல் - பொருந்துதல். (16)
|