5503. சுத்த வடிவம் சுகவடிவாம் ஓங்கார
நித்த வடிவம் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர்
ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்
தானவிளை யாட்டியற்றத் தான்.
உரை: பரசிவம் எனப்படும் சுத்த வடிவமும் ஓங்காரமாகிய அழியாத நித்த வடிவமும் ஆகிய இவ்விரண்டும் நிறைந்து விளங்கும் சித்து வடிவம் எனப்படும் ஒப்பற்ற ஞான வடிவத்தை நான் பெற்றுக் கொண்டேன்; அது கொண்டு எவ்விடத்தும் இடத்துக்கு ஒத்த செயல்களைச் செய்தற்கு நான் அந்த ஞான வடிவத்தைப் பெற்றேன். எ.று.
இடத்துக்கேற்ப செயற்படும் திறம் விளங்க, “தான விளையாட்டு” என மொழிகின்றார். தானம் - இடம். தத்துவாதீதமாய் தற்பரமாய் இருக்கும் பரசிவத்தின் தனி வடிவம் “சுத்த வடிவு” எனப்படுகின்றது. ஓம் என்னும் பிரணவாகாரமாய் இருப்பது ஓங்கார நித்த வடிவு. இவ்விரண்டும் ஒருங்கு அமைந்த வடிவம் “சித்தெனும் ஓர் ஞான வடிவு” என்று நவில்கின்றார். சித்து - ஞானம். (17)
|