5504. நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல் வார்த்தைஅன்றி
நான்உரைக்கும் வார்த்தைஅன்று நாட்டீர்நான் - ஏன்உரைப்பேன்
நான்ஆர் எனக்கெனஓர் ஞானஉணர் வேதுசிவம்
ஊன்நாடி நில்லா உழி.
உரை: நாட்டில் வாழும் நன்மக்களே! சிவமாகிய பரம்பொருள் என் உடம்பினுள் கலந்து நில்லாவிடத்து எனக்கெனத் தனி உணர்வோ? அதனை யுடைய ஒரு பொருளாவதோ? இல்லை; ஆகவே நான் உரைப்பதற்கும் ஒரு காரணமும் இல்லை; நான் உரைக்கும் சொற்களெல்லாம் நாயகனாகிய சிவனுடைய சொற்களே யன்றி நானாக உரைப்பவை அல்ல என உணர்வீர்களாக. எ.று.
சிவ பரம்பொருள் என் உடம்பில் புகுந்து உயிரோடு கலந்து ஒன்றாகியதால் என் உணர்வு அவன் உணர்வும் என் சொல் அவன் சொல்லும் ஆயின என அறிவீர்களாக; அங்ஙனம் அவன் நில்லாவிடத்து நான் ஒரு பொருளாவதுமில்லை; நான் ஒரு சொல்லைச் சொல்லும் தரமுடையவன் ஆதலுமில்லை என்பது கருத்து. (18)
|