5505.

          ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குரைக்கின்ற
          காரணமும் காரியமும் காட்டுவித்தான் - தாரணியில்
          கண்டேன் களிக்கின்றேன் கங்குல்பகல் அற்றிவிடத்
          துண்டேன் அமுதம் உவந்து.

உரை:

     இரவு பகல் இல்லாத ஏகாந்தமாகிய இடத்தில் அப்பெருமான் அருளிய ஞானவமுதத்தை மகிழ்வுடன் உண்டு இன்புறுகின்றேனாதலால் இவ்வுலகில் வேதங்களும் ஆகமங்களும் ஆங்காங்கு உரைக்கின்ற காரண காரியங்களை எடுத்துக் காட்டுமாறு படித்தருளினான்; அதனால் அவற்றை நானும் கண்டு மகிழ்கின்றேன். எ.று.

     சிவபெருமான் ஏகாந்தமாய் இருந்து எனக்கு அருள் ஞானம் வழங்கினபடியால் நான் தெளிவுற்று வேதங்களும் ஆகமங்களும் உரைக்கின்ற காரண காரியங்களை நானும் கண்டு மகிழ்ந்து உங்களுக்கு அவனருளால் காட்டுகின்றேன் என்பது கருத்து. உலகியல்பையும் உயிர்களின் இயல்பையும் சிவத்தின் இயல்பையும் ஏற்றவிடத்துக் காரண காரிய முறையில் உரைப்பதால், “ஆங்காங்கு உரைக்கின்ற காரணமும் காரியமும் காட்டுவித்தான்” என்று கூறுகின்றார்.

     (19)